ஆசியகோப்பை: மலேசிய மகளிர் அணியை 27 ரன்களுக்கு ஆல்அவுட் செய்த இந்திய மகளிர் அணி

மலேசியா கோலாலம்பூரில் ஆசியா கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடைபெற்று வரும் டி20 ஆசிய கோப்பை போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்தியா மலேசியா இரு அணிகளும் மோதிக்கொண்டன.

அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. துவக்கத்தில் இந்திய அணி 35 ருங்களுக்கு 2 விக்கெட் இழப்பு என சற்று தடுமாறினாலும் கேப்டன் ஹர்மன்ப்ரீட் கவுர் மற்றும் மித்தாலி ராஜ் இருவரும் இணைந்து 53 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ஹர்மன்ப்ரீட் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மித்தாலி ராஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தார் இதில் 13 நான்குகளும் ஒரு சிக்ஸ் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது.

அதை தொடர்ந்து, மலேசியா அணி பேட்டிங் செய்ய துவங்கியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் 5 ஓவருக்குக்குள்ளேயே 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தவித்தது. 13.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆறு வீராங்கனைகள் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட இரண்டு இலக்க ரன்களை எடுக்கவில்லை. அதிகபட்சமாக ஷாஷா அஸ்மி 10 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக கேப்டன் வின்பிரேட் துரைசிங்கம் 5 ரன்களும் (21 பந்துகளில்) சுமிக்கா அஸ்மி 4 ரன்களும் (15பந்துகளில்) எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் பூஜா 3 விக்கெட்டும் பூனம் யாதவ், அனுஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

இதுபோன்ற வெற்றி இனிவரும் போட்டிகளுக்கு நல்ல துவக்கமாக அமையும் என இந்திய அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மித்தாலி ராஜ் க்கு ஆட்டநாயகி விருது வழங்கபட்டது.

Vignesh G:

This website uses cookies.