இரண்டே ஓவரில் தலைகீழாக மாறிய போட்டி… பரபரப்பான போட்டியில் போராடி வீழ்ந்தது இந்திய மகளிர் அணி !!

கமென்வெல்த் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

காமென்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக பெண்களுக்கான டி.20 கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட்டன.

இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி இங்கிலாந்தின் பிர்மிங்கமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மூனி 61 ரன்களும்,லானி 36 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா 6 ரன்னிலும், ஷபாலி வர்மா 11 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பின் கூட்டணி சேர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீட் கவூர் – ரோட்ரிகியஸ் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்தும் மீட்டது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு விளையாடி கொண்டிருந்த போது ரோட்ரிகியஸ் (33) 15வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். பொறுப்பாக விளையாடிய மற்றொருவரான கேப்டன் ஹர்மன்ப்ரீட் கவூர் 65 ரன்கள் எடுத்திருந்த போது 16வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். பொறுப்பாக விளையாடி இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்ததால் போட்டியில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது.

அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் அவசரப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 19.3 ஓவரில் 152 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.

 

Mohamed:

This website uses cookies.