நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகாமல் இருந்திருந்தால், ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருக்கும் என முன்னாள் வீரர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்ததோடு இல்லாமல், பந்துவீச்சிலும் இந்திய அணியை திணறடித்து வருகிறது.
இங்கிலாந்து அணியுடனான இந்த போட்டியில் இந்திய அணியின் மிக மோசமான ஆட்டம், கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு மோசமாக விளையாடும் இந்திய அணியால் கடந்த மாதம் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி வீழ்த்த முடிந்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல் விராட் கோலியின் கேப்டன்சியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்திய அணியின் மிக மோசமான ஆட்டம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் அசோக் மல்கோத்ரா, விராட் கோலி இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழக்கும் நிலையே ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “விராட் கோலி சூப்பர் ஸ்டார். அவர் தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால் ரஹானே ஆஸி.,யில் இந்திய அணியை வழிநடத்திய விதம், கோலி மீதான கேப்டன்சி அழுத்தத்தை அதிகரித்துள்ளது. ரஹானே கேப்டனாக செயல்பட்டதால் தான் ஆஸி.,யில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. ஒருவேளை கோலி கேப்டனாக இருந்திருந்தால் தொடரை வென்றிருக்காது.
ஏனெனில் புஜாரா, அஷ்வின் மாதிரியான வீரர்கள் எல்லாம் கோலிக்கு பக்கத்தில் கூட போகமாட்டார்கள். ஆனால் ரஹானே சூப்பர் ஸ்டாரெல்லாம் இல்லை; சாதாரண வீரர் என்பதால், அவர் கேப்டனாக இருக்கும்போது அவரை மற்ற வீரர்களால் எளிதாக அணுக முடிகிறது என்று அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.