தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இவர் 108 ரன்கள் முதல் இன்னிங்சில் பதிவு செய்தார்.
அடுத்து களமிறங்கிய புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் கண்டனர். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் ஆடிய விராட் கோலி 7ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்த ஜடேஜா 91 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
முதல் இன்னிங்சை துவங்கிய தென்ஆப்பிரிக்க அணி துவக்கம் முதலே மிகவும் தடுமாற்றத்தை சந்தித்தது. இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மகாராஜா மற்றும் பிலாந்தார் இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் மோசமான ஸ்கோரிலிருந்து உயர்த்தினர்.
இதன்மூலம் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா 326 ரன்கள் முன்னிலை பெற்று தென்னாப்பிரிக்காவை பாலோ-ஆன் செய்ய பணித்தது.
இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி துவக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் இடம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
இறுதியாக, இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இந்தியாவிடம் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியா தொடரை 2-0 என கைப்பற்றியது.