இந்திய அணியில் இடம் பிடிக்கவே தடுமாறி வரும் அளவிற்கு ஆடிவரும் ரஹானேவிற்கு மேலும் சில வாய்ப்புகள் தொடர்ந்து கொடுப்போம் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விராட் கோலி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நான்காவது இடத்தில் நன்றாக ஆடி வந்த அனுபவ வீரர் அஜிங்கிய ரஹானே, கடந்த இரண்டு வருடங்களாக அணியில் இடம்பிடிக்கவே மிகவும் தடுமாறி வருகிறார்.
ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்து இடம்பெற்று வந்த இவர் சரியாக ஆடாமல் தடுமாறி வந்ததால், ஒருநாள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு அவரது இடத்திற்கு ராயுடு, கேதர் ஜாதவ் மற்றும் சில தொடர்களில் மனிஷ் பாண்டே ஆகியோரும் பயன்படுத்தப்பட்டனர்.
உலககோப்பைக்கு முன்பாக ஒரிரு தொடர்களில் விஜய் சங்கரும் ரஹானேவின் இடத்திற்கு பயன்படுத்தப்பட்டு, உலக கோப்பை தொடருக்கு சென்று வந்தார். மேலும் தற்போது ரிஷப் பண்ட் இவரது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
தொடர்ந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நீடித்து வரும் இவர், அங்கும் மிகவும் தடுமாறி வருவதை நம்மால் கடந்த சில தொடர்களாக காணமுடிந்தது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முதல் இரண்டு போட்டிகளில் ரஹானேவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை அதன் பிறகு அடுத்த சில போட்டிகளில் ஆடினார். அதேபோல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆடினார்.
தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போதும் கடந்த 28 இன்னிங்ஸ்களாக ஒரு சதம் கூட ரஹானே அடிக்கவில்லை. ஆனால 5 அரை சதங்கள் அடித்திருக்கும் இவரது சராசரி 25க்கும் குறைவாக உள்ளது. ஒருநாள் போட்டியில் ஏறக்குறைய இவரது இடம் இல்லாமலே போய்விட்டது.
மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் ரஹானே இடம்பெற்றிருந்தாலும், ஆடும் 11 வீரர்களில் இடம் கிடைப்பது சந்தேகம் தான் பேச்சுக்கள் அடிப்பட்டன.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணம் செல்வதற்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய விராட் கோலி ரஹானே பற்றி பேசுகையில், “அவர் மைதானத்தின் நிலை அறிந்து ஆடக்கூடியவர். அதேபோல ஆட்டத்தின் போக்கை நன்றாக புரிந்து கொண்டு அதற்கேற்ப ஆடுவார். அதனால் மேலும் சில வாய்ப்புகளை அவருக்கு நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். அதற்கு ரகானே தகுதியானவரும் கூட. அனைத்து நேரங்களிலும் ரன்கள் அடிப்படையிலேயே வீரர்களை தேர்வு செய்ய இயலாது” என்றார்.
உலக கோப்பை அரையிறுதியில் ரஹானே போன்ற ஒரு வீரர் நிலைத்து நின்று ஆடுவதற்கு இருந்திருந்தால், நிச்சயம் இந்திய அணி வென்றிருக்கும் என்பதை நேரடியாகக் கூறாமல் சூசகமாக கூறினார் விராட் கோலி.