என் மனதை தொட்டுவிட்டீர்கள்; இந்திய அணிக்கு சச்சின் பாராட்டு
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் இப்போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.
கடந்த மாதம் 14-ம் தேதி, இந்திய ராணுவத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தேசிய பாதுகாப்புக்கு துறைக்குப் பொதுமக்கள் நிதி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும் ராணுவ உடையிலானதொப்பியை அணிந்து களத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.
இதற்கான தொப்பியை இந்திய அணி வீரர் தோனி சக வீரர்களுக்கு வழங்கினார். ராணுவத்தின் மீது தோனி வைத்திருக்கும் பற்று குறித்து புதிதாகச் சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு தோனி தொப்பியை அளிக்கும்போது கேதார் ஜாதவ் யாரும் எதிர்பார்க்காத காரியத்தைச் செய்தார்.
ஆல் ரவுண்டர் ஜாதவின் கையில் தோனி தொப்பியைக் கொடுத்தவுடன் கச்சிதமான சல்யூட் ஒன்றை அடித்தார் ஜாதவ். இந்திய கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ள இதுதொடர்பான வீடியோ நேற்று இணையத்தில் காட்டுத்தீயாக பரவியது.
ஆஸ்திரேலிய அணியுடனான நேற்றைய போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்திருந்தாலும், நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்றது. பலரும் இந்திய அணியின் இந்த செயலை தங்களது சமூக வலைதள பக்கங்களின் மூலம் பாராட்டினர்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரும் இந்திய அணியின் இந்த செயலை பாராட்டும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்திய வீரர்களுக்கு தோனி தொப்பியை வழங்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சச்சின் அதில், இது எனது மனதை தொட்டுவிட்டது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.