இந்திய வேகபந்துவீச்சில் தவிடுபொடியாகிய வங்க பாம்புகள்.. உணவு இடைவேளைக்கு முன் 73/6*!

முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி உணவு இடைவேளைக்கு முன்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தாக்கு பிடிக்க முடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதே உத்வேகத்துடன் பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினர். முதல் டெஸ்ட் போட்டி போலவே இந்திய பந்துவீச்சாளர்களை தாக்கு பிடிக்க முடியாமல் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

 

துவக்க வீரர் இம்ருள் கயேஸ் 4 ரன்களுக்கு இசாந்த் சர்மாவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மோமினுள் ஹக், மூத்த வீரர் ரஹீம், மித்துன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த வங்கதேச அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

துவக்க வீரர் சத்மான் இஸ்லாம் சற்று நிலைத்து ஆடினாலும் அவராலும் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. 29 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக மூத்த வீரர் மகமதுல்லா 6 ரன்களில் ஆட்டமிழக்க, 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உணவு இடைவேளைக்கு முன்பாக வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடி வருகிறது. லிட்டன் தாஸ் 24 ரன்களுடனும், நையிம் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், சமி ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.

21-வது ஓவரில் சமி வீசிய பந்து, லிட்டன் தாஸ் தலையை பதம் பார்த்தது. இதனால் நிலைகுலைந்த லிட்டன் தாஸ், உணவு இடைவேளைக்கு இரண்டு ஓவர்களுக்கு முன்பாக ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியேறினார். இதனால் உணவு இடைவேளையும் விரைவில் விடப்பட்டது.

Prabhu Soundar:

This website uses cookies.