கப் அடிக்கணும்னு நெனச்ச ஆர்சிபி-க்கு இப்படி ஒரு நிலையா? – பெங்களூரு நிர்வாகம் எடுத்த திடுக் முடிவு!
ஐ.பி.எல். தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சி முகாம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். டி–20 கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். தொடர் வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டது.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் இந்த அவசர நிலை கட்டுக்குள் வரவில்லை என்றால் அதிகபட்ச அவகாசமாக ஏப்ரல் 20ஆம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் இயல்புநிலை வரவில்லை என்றால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நிறுத்தப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இத்தொடரில் விளையாடும் 8 அணிகளும், தங்களது பயிற்சி முகாமை நிறுத்திவைக்க முடிவு செய்தன. இதனையடுத்து வரும் 21ஆம் தேதியில் துவங்க இருந்த விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சி முகாம் மாற்று தேதி குறிப்பிடப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதற்க்கு முன்பாக சென்னை, மும்பை, கோல்கட்டா ஆகிய அணிகளின் பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து பெங்களூரு அணி ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில்,
“வீரர்களின் உடல்நலன், பாதுகாப்பை மனதில் கொண்டு, வரும் மார்ச் 21ல் துவங்க இருந்த பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் அனைவரும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்திறோம்.” என தெரிவித்திருந்தது.