கிரிக்கெட் போட்டிகளில் ஆஷஸ் தொடரை அடுத்து மிகவும் விறுவிறுப்பான போட்டி யாதெனில், அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி ஆகும்.
கடந்த சில வருடங்களாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள மோதல்களின் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் சுற்றுப்பயணம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் முழுமையாக ஏமாற்றம் அடைந்தது இரு நாட்டு ரசிகர்கள் தான்.
ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் தற்போது வரை மோதிக் கொள்கின்றனர்.
கிரிக்கெட் உலகில் இனி இந்த இரு நாடுகளில் மோதிக்கொள்ளும் போட்டி கனவாகிப் போன நிலையில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்திய டென்னிஸ் அணி தற்போது பாகிஸ்தான் செல்ல இருக்கிறது.
இந்த ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருப்பதால், இந்தியா பங்கேற்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய டென்னிஸ் சங்கம் இதற்கு ஒப்புதல் அளித்து வீரர்களை பாகிஸ்தான் செல்ல அனுமதித்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் இந்திய டென்னிஸ் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மிகவும் விமர்சித்து வந்தனர். ஆனால் இதற்கு பதிலளித்த இந்திய டென்னிஸ் சங்கம்,
“இரு நாடுகள் மோதும் தொடர் என்றால் அதற்கு நாங்கள் அனுமதி கொடுத்திருக்க மாட்டோம். ஆனால், இது ஒட்டுமொத்த டென்னிஸ் உலகிற்கும் நடக்கும் தொடர். தனிப்பட்ட இரு நாடுகளுக்கு இடையேயான கருத்தை ஒரு தொடரில் எடுத்துச் செல்ல இயலாது. அது வீரர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்” என விளக்கம் அளித்துள்ளது