“ஆண்கள் அணி விட்டதை பெண்கள் அணி தட்டித்தூக்கியது” 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய பெண்கள் அணி!

இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றிருக்கிறது இந்திய பெண்கள் அணி.

ஏழு பெண்கள் அணி பங்கேற்ற ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பங்களாதேஷில் நடத்தப்பட்டது. புள்ளிப்பட்டியல் அடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நான்கு அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்ததால் அரை இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றன.

இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியிலும் மோதின. இதில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 74 ரன்கள் வித்தியாசத்தில் முதல் அரை இறுதிப் போட்டியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதன் பிறகு இலங்கை அணி பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இன்று இறுதிப்போட்டி இலங்கை மற்றும் இந்தியா இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. துவக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகள் விழத்துவங்கின. 18 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை பெண்கள் அணி, 20 ஓவர்கள் வரை ஆல்-அவுட் ஆகாமல் தாக்குப்பிடித்தது. ஆனால் ரன்கள் அடிக்க முடியவில்லை. முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தன.

எளிய இலக்கை துரத்திய இந்திய பெண்கள் அணிக்கு இலங்கை அணியின் பந்துவீச்சு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. நிதானமாக பேட்டிங் செய்து இலக்கை எட்ட முயற்சித்தனர். ஸபாலி வர்மா 5 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்வஸ் 2 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

நட்சத்திர வீராங்கனை ஸ்மிருத்தி மந்தனா 25 பந்துகளில் 51 ரன்கள் விலாசினார். இதில் மூன்று சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும். இவருக்கு பக்கபலமாக இருந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11 ரன்கள் அடித்திருந்தார். இருவரும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 8.3 ஓவர்களில் 71 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு எட்டு விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் கோப்பையையும் வென்று தந்திருக்கின்றனர்.

இந்திய பெண்கள் அணி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை தட்டி சென்றது.

Mohamed:

This website uses cookies.