இப்போதான் தெரியுது இந்தியா எப்படி ஜெயிக்கிறாங்கன்னு.. ஒழுங்கா கிரிக்கெட் ஆடாம, பிட்ச் ரெடி பண்ணி வின் பண்றது எல்லாம் ஒரு வெற்றியா? – ஆஸி., ஜாம்பவான் காட்டம்!

ரோகித் சர்மா மற்றும் குழுவினர் பிட்ச் தயார் செய்வதை விட்டுவிட்டு, கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வெற்றிபெற முயற்சி செய்யுங்கள் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் இயேன் சேப்பல்.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் போட்டி துவங்கியதில் இருந்து இந்திய மைதானங்கள் பற்றியும் அதன் பிட்ச் பற்றியும் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த விமர்சனம் ஒவ்வொரு போட்டிக்கும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி இரண்டரை நாள்களில் முடிந்துவிட்டது. அதேபோல் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியும் இரண்டரை நாட்களில் முடிந்துவிட்டது. இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டி இரண்டு நாட்களிலேயே முடிந்துவிடும் அளவிற்கு விக்கெட்டுகள் வரிசையாக விழுந்து கொண்டிருந்தது. பின்னர் ஆஸ்திரேலிய அணியினர் சற்று நிதானமாக விளையாடியதால் ஆட்டம் மூன்றாம் நாள் காலை வரை சென்றது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விட இந்தூர் மைதானத்தின் பிட்ச் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பந்து சராசரியாக 5 டிகிரி டர்ன் ஆனது. ஆனால் இந்தூர் பீச் 6 டிகிரி வரை சென்றது. அதிகபட்சமாக 8.5 டிகிரி வரை டர்ன் ஆனது. இவ்வளவு அதிகமாக டர்ன் ஆனதால் வரிசையாக விக்கெட் விழுந்து கொண்டே இருந்தன.

போட்டி முடிந்த பிறகு இந்த மைதானத்திற்கு “தரமற்ற பிட்ச்” என்கிற தர சான்றிதழை ஐசிசி வழங்கி, கூடுதல் விமர்சனத்தை முன்வைத்தது.

பிட்ச் விஷயத்தில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தலையீடு இருக்கிறது என பலரும் தெரிவித்து வந்தனர். பிட்ச் பராமரிப்பாளரிடம் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் பேசுவது போன்ற புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகின.

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் குழுவினர் பிட்ச் விஷயத்தில் தலையிடாமல்,  முழுமையாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவேண்டும். அதுதான் ஆரோக்கியமானது என்று விமர்சனத்தை காட்டமாக முன்வைத்திருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் இயேன் சேப்பல்.

“இந்திய அணியினர் தயாரித்த பிட்ச் அவர்களுக்கே பின்விளைவை கொடுத்திருக்கிறது. முதலில் இந்திய அணி பிட்ச் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். எங்காவது அணியின் வீரர்கள் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் பிட்ச் பராமரிப்பாளரிடம் பேசிவதை இதற்கு முன்னர் பார்த்ததுண்டா?”

“ஆஸ்திரேலியாவிலும் இந்திய அணியினர் கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வெற்றிகளையும் பெற்றனர். அது முழுக்க முழுக்க பிட்ச் பராமரிப்பாளர்கள் தயார் செய்தது. அணியினர் மற்றும் பயிற்சியாளர்கள் எந்த வகையிலும் பிட்ச் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். ஆனால் இந்திய அணி அவர்களுக்கு சாதகமாக பிட்ச் தயார் செய்துகொள்கின்றது.”

“பரமரிப்பாளர்கள் வேலையை அவர்களே பார்க்கட்டும். வீரர்கள் பயிற்சியாளர்கள் மூக்கை நுழைப்பது நியாயமல்ல. இனியும் அதை செய்யாதீர்கள்.” என்று காட்டமாக பேசி சில அறிவுரைகளை கூறினார் இயேன் சேப்பல்.

Mohamed:

This website uses cookies.