ஏராளமான இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் தங்களை மேம்படுத்திக்கொள்ள இங்கிலாந்தில் நடைபெறும் பிரபலமான கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகின்றனர் இதற்காக பிசிசிஐ நிர்வாகமும் தொடர்ந்து ஒப்புதல்களை அளித்து வருகிறது.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா இங்கிலாந்து கவுண்டி அணியான யார்க்ஷயர் அணிக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார்.
இங்கிலாந்து உலகக் கோப்பை தொடரை முடித்துவிட்டு இந்திய அணி, ஜூலை மாதம் துவங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக ஆட பிசிசிஐ இந்திய அணியில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் குறிப்பாக இந்திய அணிக்கு ஆடுவதற்காக இளம் வீரர்களான ப்ரிதிவி ஷா, மயங்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி போன்ற வீரர்களை தீவிரமாக தயார் படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து கவுண்டி அணியான சர்ரே அணிக்கு ஆடுவதாக இருந்தது ஆனால் பயிற்சியின்போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் ஆட முடியாமல் போனது.
இந்நிலையில், இந்த ஆண்டு கவுண்டி அணியில் ஆடுவதற்காக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே பிசிசிஐ இடம் அனுமதிக்க கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு முழு ஒப்புதல் அளித்துள்ளது பிசிசிஐ. இதனால் வரும் கவுன்டி சீசனில் அவர் ஆட வாய்ப்பு இருக்கிறது. அவரை ஹாம்ப்ஷைர் அணி எடுப்பதற்காக முழுவீச்சுடன் ஆர்வம் தெரிவித்து வருகிறது.
அதேபோல் ரஹானேவை தங்களது அணிகளில் ஆட வைப்பதற்காக நாட்டிங்காம்ஷைர், எஸ்எக்ஸ் போன்ற அணிகளும் தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால், ப்ரீத்திவி ஷா ஆகியோரையும் கவுண்டி போட்டிகளில் ஆட வைப்பதற்காக அந்தந்த அணியின் மேலாளர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.