இந்திய அணி இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி 2-வது இடத்தை பிடித்தது. 1987, 1996, 2015 ஆகியவற்றில் அரை இறுதியில் தோற்றது.
12-வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. இந்திய அணிக்கு 3-வது உலகக்கோப்பை கிடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியை வைத்து சிறந்த அணியை (ஆல்டைம் பெஸ்ட் லெவன்) ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
ஆல்டைம் உலக அணிக்கு கபில்தேவ் கேப்டனாக உள்ளார். டோனி துணை கேப்டனாக இருக்கிறார். 11 பேர் கொண்ட இந்த அணியில் விராட் கோலிக்கு இடமில்லை. அவர் 2 உலகக்கோப்பையில் ஆடியுள்ளார்.
உலகக்கோப்பையில் இந்தியாவின் சிறந்த லெவன் வருமாறு:-
1. தெண்டுல்கர்
சச்சின் இல்லாத ஒரு இந்திய கனவு அணியை கற்பனை செய்ய முடியாது, 6 உலகக்கோப்பையில் (1992- 2011) விளையாடி 2278 ரன் (44 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 56.95 அதிகபட்சமாக 152 ரன் குவித்துள்ளார். 6 சதமும், 15 அரை சதமும் இதில் அடங்கும். உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்த சர்வதேச வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். 1996, 2003, 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்தார்.