இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 287 ரன்கள் சேர்த்த போதிலும் அதை கொண்டு எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹெட்மயரும், ஷாய் ஹோப்பும் சதம் அடித்து தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இந்திய அணியில் கேப்டன் கோலி 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதே போல் துணை கேப்டன் ரோகித் சர்மாவின் மந்தமான பேட்டிங்கும் (56 பந்தில் 36 ரன்) ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போடுவது போல் அமைந்தது. சென்னை ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் தலா 10 ஓவர்கள் பந்து வீசிய போதிலும் ஒரு விக்கெட்டும் எடுக்காதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அறிமுக வீரர் ஷிவம் துபே 7.5 ஓவர்களில் 68 ரன்களை வாரி வழங்கினார்.
விசாகப்பட்டினம், பொதுவாக பேட்டிங்குக்கு உகந்த மைதானம் ஆகும். இங்கு 300 ரன்களுக்கு மேல் குவித்தால் தான் சவாலான ஸ்கோராக இருக்கும். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து ஆடுவது அவசியமாகும். ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் வரிசையில் அரைசதம் அடித்தனர். அவர்கள் பார்முக்கு வந்திருப்பது அணிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.
இது இந்தியாவுக்கு வாழ்வா- சாவா? ஆட்டமாகும். இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் இந்தியா தோல்வி கண்டால் சில பெருமைகளை இழக்க வேண்டி இருக்கும். இந்திய மண்ணில் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களை வென்று கடைசி 3 ஆட்டங்களில் தோற்று தொடரை பறிகொடுத்தது.
போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல்:
ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ், ரிஷப் பன்ட், ஷிவம் துபேட, ஜடேஜா அல்லது யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது ஷமி