ஐசிசி விருது வேட்டையில் இறங்கிய இந்தியர்கள்… ஸ்கையை தோட்ட ஸ்கை.. 2022ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த டி20 வீரர் விருது அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதை அறிவித்துள்ளது ஐசிசி.

டி20 தொடர்களை பொருத்தவரை, 2022ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சற்று ஏற்றம் இறக்கமாகவே இருந்தது. ஆசியக் கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. அதேபோல் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்று பரிதாபமாக வெளியேறியது.

சூரியகுமார் யாதவிற்கு 2022ம் ஆண்டு ஒரு கனவு ஆண்டாக அமைந்தது. 31 டி20 போட்டிகள் விளையாடி, 9 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் உட்பட, 1164 ரன்கள் விளாசினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 187.63 ஆகும். இவரது சராசரி 46.44 ஆகும்.

டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் மூன்று அரை சதங்கள் உட்பட 239 ரன்கள் அடித்து ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்திலும், இந்திய வீரர்கள் மத்தியில் இரண்டாவது இடத்திலும் இருந்தார். விராட் கோலி 6 போட்டிகளில் 296 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சிறப்பாக விளையாடியதால் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதுக்கு நாமினேஷன் செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து ஷாம் கர்ரன், சிக்கந்தர் ராசா மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரும் நாமினேஷனில் இடம்பெற்று போட்டியிட்டனர்.

கடந்த ஓரிரு வாரங்களாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் இறுதியில், சூரியகுமார் யாதவ் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரராக ஐசிசி-ஆல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விருதை அறிவித்தவுடன் பேசிய சூரியகுமார் யாதவ்: “சிறப்பாக உணர்கிறேன். 2022 எனக்கு நன்றாக அமைந்தது. என்னைப் பொருத்தவரை – 2022ம் ஆண்டு நான் நன்றாக விளையாடிய சில ஆட்டங்களில், நான் மிகவும் ரசித்து விளையாடினேன். இந்திய அணிக்காக நான் அடித்த முதல் சதத்தை எனக்கு மிகவும் நெருக்கமானதாகவும் சிறப்பானதாகவும் நான் கருதுகிறேன். முதல் சதம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது அல்லவா! இதேபோல இந்த ஆண்டும் இன்னும் பல சிறந்த ஆட்டங்கள் என்னிடமிருந்து வரும் என்று நம்புகிறேன். நன்றி,” என்று ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதை ஏற்றுக்கொண்ட பிறகு சூரியகுமார் யாதவ் பேசினார்.

Mohamed:

This website uses cookies.