இந்திய அணியின் அடுத்த முக்கிய தொடரும் ரத்து; ரசிகர்கள் கவலை
செப்டம்பர் மாதம் நடக்க இருந்த இந்தியா இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாத காலமாக எவ்வித கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. பல தடைகளை கடந்து இங்கிலாந்து – விண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து – விண்டீஸ் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையேயான தொடரும் நடக்க உள்ளது. இப்படியாக மற்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் மெல்ல மெல்ல துவங்க இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களை மீண்டும் களத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தநிலையில், வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த இந்தியா இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது. தற்போது நமது நாட்டில் நிலவும் சூழ்நிலையை பார்க்கையில் இந்த போட்டி தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது.
ஏற்கனவே இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுடனான தொடர் மற்றும் ஆசிய கோப்பை ஆகியவை தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.