இரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குறித்து இந்திய அணி கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.
இரக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை- ஆப்கான் டெஸ்ட் குறித்து ரகானே கருத்து
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் ஆகும்.
முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கினாலும், நாங்கள் இரக்கம் காட்டமாட்டோம், அதேபோல் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கேப்டன் ரகானே கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் குறித்து ரகானே கூறுகையில் ‘‘நாங்கள் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியை சாதாரணமாக நினைத்து களம் இறங்க போவதில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடக் கூடிய அணி. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான போட்டி என்பதால் எதிரணிக்கு எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. நாங்கள் களம் இறங்கி இரக்கமற்ற நிலையில் விளையாட விரும்புகிறோம்.
நாங்கள் எங்களுடைய பலம் மற்றும் சாதகமான விஷயத்தோடு களம் இறங்க இருக்கிறோம். நாங்கள் ஆப்கானிஸ்தான் அணியை பற்றி யோசிக்க வேண்டியதில்லை. எதிரணிக்கு மரியாதை கொடுக்க வேண்டியதுதான். ஆனால், நாங்கள் களமிறங்கி 100 சதவிகிதத்திற்கு மேல் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது’’ என்றார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை பெங்களூரிவில் தொடங்குகிறது. ஆப்கான் அணிக்கு டெஸ்ட் போட்டி அந்தஸ்தை ஐசிசி வழங்கியப் பின்பு, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவை எதிர்கொள்கிறது.
ஆனால், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கணக்குப்படி முரளி விஜய்யும், ஷிகர் தவாணும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். அதற்கடுத்தப்படியாக புஜாராவும், கோலியின் இடத்தில் ரஹானேவும், அதற்கடுத்து கருண் நாயரும், தினேஷ் கார்த்திக்கும் களமிறக்கப்படுவார்கள். அதன் பின்பு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
இதன் பின்பு பவுலர்கள் வரிசையை பார்க்கலாம் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் இந்த மூவரில் யாரேனும் இருவர் அணியில் இடம் பெறுவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர், அறிமுக வீரர் சைனி, உமேஷ் யாதவ் நால்வரில் மூன்று பேருக்கோ அல்லது இரண்டு பேருக்கோ வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி மட்டும்தான் என்பதால் புது முகங்களுக்கான வாய்ப்பு அதிகமிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.