ஒருபக்கம் தாக்குதல் நடத்திய அஸ்வின்.. மறுபக்கம் ரன்கள் வாரிகொடுத்த வேகபந்துவீச்சாளர்… இந்தியாவை சோதிக்கும் கவாஜா – கிரீன் ஜோடி! – உணவு இடைவேளை ரிப்போர்ட்!

ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பு வரை, நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 347 ரன்களை அடித்திருக்கிறது. கவாஜா 150 ரன்கள் விளாசினார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று, ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

ஆஸி., அணிக்கு துவக்கம் முதலே கவாஜா நிதானமான அணுகுமுறையை கடைப்பிடித்து வந்தார். மறுமுனையில் கவாஜா உடன் சேர்ந்து சிறிய சிறிய பார்ட்னர்ஷிப்கள் அமைத்த டிராவிஸ் ஹெட்(32) மற்றும் ஸ்மித்(38) இருவரும் தங்களது 30-களில் ஆட்டம் இழந்தனர்.

முதல்நாள் ஆட்டத்தில் கடைசி ஷெஷனில் உள்ளே வந்த கேமரூன் கிரீன், வந்த வேகத்திலேயே தன்னுடைய அதிரடியான அணுகுமுறையுடன் விளையாட ஆரம்பித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் அதிவேகத்தில் உயர்ந்தது. முதல்நாள் ஆட்டத்தின் கடைசி 10 ஓவர்களில் 54 ரன்கள் அடித்திருந்தனர். அதில் கேமரூன் கிரீன் மட்டுமே கிட்டத்தட்ட 40 ரன்களுக்கும் மேல் அடித்திருந்தார்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலிய அணி 255 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் காணப்பட்டது. கவாஜா 104 ரன்கள், கேமரூன் கிரீன் 49 ரன்கள் அடித்திருந்தனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்திய பவுலர்கள் போட்டு வைத்திருந்த எந்தவொரு திட்டமும் இதுவரை எடுபடவில்லை. கவாஜா – கிரீன் ஜோடி இன்றைய நாள் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக இந்திய பவுளர்களை எதிர்கொண்டு, ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இன்றைய நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பு வரை, கவாஜா 150 ரன்களும், கேமரூன் கிரீன் 95 ரன்களும் அடித்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்க்கு 347 ரன்கள் அடித்திருக்கிறது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு கிரீன் மற்றும் கவாஜா ஜோடி 177 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணியினர் அமைக்கும் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

Mohamed:

This website uses cookies.