இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரிலும் (0-3), டெஸ்ட் தொடரிலும் (0-2) இந்திய அணி படுதோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. மறுபடியும் வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கு உள்ளூரில் நடக்கும் இந்த தொடரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்.
முதுகுவலி காயத்தால் ஓய்வில் இருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியுள்ளார். 6 மாதத்திற்கு பிறகு சர்வதேச போட்டியில் கால்பதிக்கும் அவரது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காயத்தில் சிக்கியுள்ள ரோகித் சர்மா இந்த தொடரில் ஆடவில்லை. அதே நேரத்தில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷிகர் தவானின் வருகை அணிக்கு வலுசேர்க்கும். தவானுடன், இளம் வீரர் பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது.
நியூசிலாந்து தொடரில் சொதப்பிய இந்திய கேப்டன் விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். கோலி இன்னும் 133 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்து விடுவார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை ….
84 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன
இதில் 35-ல் இந்தியாவும், 46-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன
3 ஆட்டத்தில் முடிவில்லை.
தென்ஆப்பிரிக்க அணி, இந்திய மண்ணில் இரு நாட்டு ஒரு நாள் தொடரில் ஆடுவது இது 6-வது முறையாகும். இதில் 2015-ம் ஆண்டில் மட்டும் தென்ஆப்பிரிக்கா தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.