ஐ.பி.எல் டி.20 தொடரை வைத்து சூதாடிய 11 பேர் கைது
ஐ.பி.எல் டி.20 தொடரை வைத்து சூதாடிய 11 பேரை குருகிராமில் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் சென்னையை தவிர இந்தியாவின் மற்ற பிற முக்கிய நகரங்களில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அணியும் அடுத்தகட்ட சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த ஐ.பி.எல் தொடரை வைத்து சூதாட்டம் நடத்திய 11 பேரை குருகிராமில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
குருகிராமில் உள்ள விடுதி ஒன்றில் அப்பகுதி போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நடத்திய திடீர் சோதனையில் அந்த விடுதியில் சூதாட்டம் நடைபெறுவதை கண்டறிந்த போலீஸார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 50,000 ரூபாய் பணத்தையும், சூதாட்டத்திற்கு பயன்படுத்தும் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பலவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டெல்லி – கொல்கத்தா இடையேயான போட்டியை வைத்து சூதாடியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.