சென்னையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திட்டமிட்டபடி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காத சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதிலும் குறிப்பாக இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, வெற்றியுடன் இந்த தொடரை துவங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை மைதானத்தில் விளையாடும் நாளிற்காக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தாலும், மறுபுறம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகமே போராடி கொண்டிருக்கும் போது ஐ.பி.எல் போன்ற பொழுதுபோக்கு கேளிக்கைகள் எங்களுக்கு தேவையில்லை என்றும், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்களை சிறைபிடித்து ஒட்டுமொத்த இந்தியர்களை தங்கள் பக்கம் திருப்புவோம் என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சவால் விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல் நாளை நடைபெறும் போட்டி சென்னைக்கு பதிலாக கேரளாவின் திருவணந்தபுரத்திற்கு மாற்றப்படலாம் என்றும் நேற்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த தகவலை மறுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், திட்டமிட்டபடி சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் என்று அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா அளித்துள்ள பேட்டியில், “திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டிகள் சென்னையில் நடைபெறும். அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருடன் எவ்வித அரசியலையும் கலக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.