கிறிஸ் மோரிஸிற்கு பதிலாக டெல்லி அணியில் இணைகிறார் ஜூனியர் டாலா
காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய கிறிஸ் மோரிஸிற்கு பதிலாக தென் ஆப்ரிக்கா அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் ஜூனியர் டாலா டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS
இந்த தொடருக்காக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் விலை கொடுத்து வாங்கப்பட்ட கவுதம் காம்பீர் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த போது கொல்கத்தா அணிக்கு இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்த காம்பீர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது அந்த அணியின் கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியோ நடப்பு தொடரில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதன் மூலம் புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு டெல்லி அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸும் காயம் அடைந்ததால் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.
காயம் குண்மடைய நீண்ட நாட்கள் தேவைப்படும் என்பதால் கிறிஸ் மோரிஸ் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக டெல்லி டேர்டெவில்ஸ் நிர்வாகம் அறிவித்தது. இது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி அணியில் மோரிஸ் இடத்தில் மற்றொரு தென் ஆப்ரிக்கா வீரரான ஜூனியர் டாலாவை டெல்லி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
காயம் காரணமாக மோரிஸ் ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகி நாடு திரும்ப உள்ளதால் அவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்கா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லி டேர்டெவில்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்கா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜூனியர் டாலா சமீபத்தில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான டி.20 தொடரின் போது தான் டி.20 போட்டிகளுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது