சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் ஒரு புதிய சோதனை
கேதர் ஜாதவ் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக சென்னை அணியில் ஒபந்தம் செய்யப்பட்டுள்ள டேவிட் வில்லே விசா பிரச்சனை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா தற்போது இந்தியாவின் பல பகுதிகள் நடந்து வருகிறது. இதில் இரண்டு வருட தடைக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மும்பையை திரில்லிங் வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற கொல்கத்தா அணியுடனான போட்டியில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று அடுத்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
ஒருபக்கம் சென்னை அணி வெற்றி நடை போட்டு வந்தாலும் மறுபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஒரு வார காலமாக கடும் சோதனைகளை சந்தித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கோரி தமிழகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால் சென்னையில் விளையாட இருந்த அனைத்து போட்டிகளும் புனேவிற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது புனேவில் போட்டி நடைபெறுவதிலும் சிக்கல்.
போதாக்குறைக்கு சென்னை அணியில் காயமடையும் வீரர்கள் பட்டியலில் ஒவ்வொரு போட்டியிலும் நீண்டு கொண்டே செல்கிறது. சுரேஷ் ரெய்னா, டூ பிளஸிஸ், முரளி விஜய், கேதர் ஜாதவ் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், புதிதாக அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட டேவிட் வில்லே இந்தியா வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கேதர் ஜாதவ் காயம் காரணமாக ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகினார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லே சென்னை அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை அணியில் விரைவில் இணையும் பட்சத்தில் சென்னை அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்துள்ள நிலையில், டேவிட் வில்லே பஞ்சாப் அணியுடனான அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசா பிரச்சனை காரணமாக டேவிட் வில்லே இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் பஞ்சாப் அணியுடனான அடுத்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.