சென்னை அணியை சிறப்பாக வழிநடத்துகிறார் தல தோனி; ஸ்ரீ காந்த் பாராட்டு !!

சென்னை அணியை சிறப்பாக வழிநடத்துகிறார் தல தோனி; ஸ்ரீ காந்த் பாராட்டு

சென்னை அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களையும் தல தோனி சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று முன்னாள் வீரர் கிரிஷ் ஸ்ரீ காந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு வருடங்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடமல் இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ள தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் மாஸ் காட்டி வருகிறது.

ரசிகர்களின் இரண்டு வருட காத்திருப்பை கொஞ்சம் கூட வீணடிக்காமல் ஒவ்வொரு போட்டியிலும் கெத்து காட்டி வரும் சென்னை அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் ஹைதராபாத் அணியை தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றிற்கும் தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த், சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த அணியின் கேப்டனான தோனியின் சிறப்பான கேப்டன்சியே முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசியதாவது “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களின் தனித்துவத்தையும் சரியாக புரிந்து வைத்துள்ள தோனி, ஒவ்வொரு போட்டியிலும் தேவையானவர்களை தேர்வு  செய்து அவர்களை மிகச்சரியாக பயன்படுத்தி வருகிறார். இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் மிக முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். தோனி ஒவ்வொருவரையும் சரியாக புரிந்து வைத்து பயன்படுத்துவதால் தான் அம்பத்தி ராயூடு, தீபக் சாஹர் போன்றோரின் திறமையும், அவர்களின் சிறப்பான ஆட்டமும் அனைவருக்கும் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.