மும்பைக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி !!

மும்பைக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 11வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தொடங்கிய 55வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அணியும், 5வது இடத்தில் இருக்கும் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

மும்பைக்கு ரன் ரேட் 0.384 என நேர்மறையாக உள்ளதால் இன்று டெல்லிக்கு எதிராக மும்பை வெற்றி பெற்றுவிட்டால் 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் மும்பை அணி 11 போட்டிகளிலும், டெல்லி அணி வெறும் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று மும்பைக்கு எதிராக சம பலத்தை காட்டியுள்ளது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டிகளில் டெல்லி அணி 5 போட்டியிலும், மும்பை அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணியில் அவேஸ் கானுக்குப் பதிலாக லியாம் பிளங்கட் சேர்க்கப்பட்டுள்ளார். . இதே போன்று மும்பை அணியில் மெக்லாஹனுக்குப் பதிலாக முஸ்டாபிகுர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி விட்டன. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் பெறும் புள்ளிகளைப் பொறுத்து ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.