தடைகளை தாண்டி டெல்லி அணியில் இணைந்தார் முகமது ஷமி
கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த முகமது ஷமி ஒருவழியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (வயது 27). இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். முகமது ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட் செய்துள்ள விவரங்களை ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் அதிரடியாக ஷேர் செய்திருந்தார்.
இதையடுத்து ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கணவரின் குடும்பத்தார் தன்னை கொலை செய்ய கூட முயற்சித்ததாகவும் கடந்த மாதம் 8-ம்தேதி கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல் நிலையத்தில் ஹசின் ஜகான் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஷமி மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொடுமைப்படுத்துதல், மிரட்டுதல், துரோகம், குடும்ப வன்முறை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் உத்தர பிரதேசத்தில் உள்ள முகமது ஷமியின் வீட்டில் சென்று விசாரணை நடத்தியது. இதற்கிடையில் ஷமியின் மனைவி ஹசின் ஜகான் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அத்துடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி உரிமையாளரையும் சந்தித்தார்.
உச்சக்கட்டமாக ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டார். இதுகுறித்து பிசிசிஐ ஊழல் தடுப்புக்குழு விசாரணை நடத்தி, அப்படி நடைபெறவில்லை என்று அறிவித்தது. இதனால் ஷமி பிசிசிஐ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே டேராடூனில் இருந்து டெல்லிக்கு வரும்போது ஷமியின் கார் விபத்திற்குள்ளானது. இதில் காயம் அடைந்த அவருக்கு தையல் போடப்பட்டது.
இதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியது. இந்நிலையில் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், இறுதியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சி முகாமிற்கு திரும்பியுள்ளார்.