பெங்களூர் அணியுடனான போட்டியில் ரசல் விளையாடுவார்; தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடும் பெங்களூர் அணியுடனான அடுத்த போட்டியில் ஆண்ட்ரியூ ரசலும் இருப்பார் என கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 34 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 35 வது போட்டியான இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
கொல்கத்தா அணி விளையாடிய கடந்த போட்டியில் பவுன்சர் பந்தில் காயமடைந்த கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் ஆண்ட்ரியூ ரசல் இன்றைய போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், பெங்களூர் அணியுடனான போட்டியில் ரசலும் இருப்பார் என கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான போட்டிக்காக நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம், நாங்கள் ஆண்ட்ரியூ ரசலுக்கும் சேர்த்தே திட்டங்கள் வகுத்துள்ளோம், பெங்களூர் அணியுடனான போட்டியில் அவர் நிச்சயம் முழு உடற்தகுதியுடன் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் கொல்கத்தா அணியின் மிக முக்கிய வீரர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது” என்றார்.
அல்ஜாரி ஜோசப் விலகல்;
ஆண்ட்ரியூ ரசலை போல நடப்பு ஐ.பி.எல் தொடரின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் பெற்ற மற்றொரு விண்டீஸ் வீரரான ஆல்ஜாரி ஜோசப் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் அடைந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 13-ந்தேதி மும்பையில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த போட்டியில் அதன்பின் பீல்டிங் செய்யவில்லை. இந்நிலையில் தோள்பட்டை காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.