பெங்களூர் அணிக்கு பெரும் அதிர்ச்சி!! ஸ்டெய்ன் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றம்!!

கடந்த இரண்டு போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள்பட்டையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து இன்று வெளியேறியுள்ளார்.

இந்த ஐபிஎல் தொடர் பெங்களூரு அணிக்கு மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. ஆடிய முதல் 6 போட்டிகளில் அனைத்தையும் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி. அதன் பிறகு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மீண்டும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவ பெங்களூரு அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதே மிகவும் கடினமான ஒன்றாக மாறியது.

பெங்களூரு அணிக்கு இந்த தொடரில் ஆடுவதாக இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர்-நைல் அட முடியாமல் போனதால், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகாமல் இருந்த டேல் ஸ்டெய்ன் பெங்களூரு அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார் டேல் ஸ்டேயின். அப்போட்டியில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஸ்டெயின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டெயின் பவர்-பிளே ஓவர்களில் சென்னை அணியை மிரள வைத்தார். குறிப்பாக இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்ட ஸ்டெயின் அணியில் ஆடாமல் வெளியில் அமர்த்தப்பட்டார். இப் போட்டியில் பெங்களூரு அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது ஆனாலும் அதிர்ஷ்டவசமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்டெயின் விரைவில் குணமடைந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோள்பட்டை வீக்கம் மிகவும் தீவிரம் அடைந்ததால் ஐபிஎல் தொடரில் இருந்து இன்று வெளியேறி நாடு திரும்ப உள்ளார்.

அடுத்து வரும் மூன்று லீக் போட்டிகளிலும் கட்டாயம் வென்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்குள் பெங்களூரு அணி நுழைய முடியும் என இருந்த நிலையில், இப்படி முக்கிய வேகப்பந்துவீச்சாளர் வெளியேறியது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும்.

Prabhu Soundar:

This website uses cookies.