பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சன், அதை தொடர்ந்து வந்துள்ள ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஆடாமல், இரண்டாவது போட்டியில் ஆடினார். ஆனால், அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்த போட்டியில் இருந்து விலகி வெளியில் அமர்ந்துகொண்டார்.
சென்ற ஆண்டு அணியை வழிநடத்தி சென்று அதிக ரன் குவித்தவராகவும் இருந்தார். இந்த ஆண்டு அணிக்கு வார்னர் இடம்பெற்றது பலமாக இருந்தாலும், ஹைதராபாத் அணி தொடர்ந்து மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.
குறிப்பாக, மும்பை அணிக்கு எதிராக 136 ரன்கள் எடுக்க முடியாமல் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி படு தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில் மீண்டுமொரு மோசமான ஆட்டத்தை சந்திக்க நேரிட்டது ஹைதராபாத் அணிக்கு. அணிக்கு பந்துவீச்சு பலம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி அதை இல்லை என உணர்த்தியுள்ளது.
அதேபோல, துவக்க வீரர்களான, வார்னர் மற்றும் பைர்ஸ்டோவ் இருவரும் முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், அடுத்த 3 போட்டிகளில் அதே ஆட்டத்தை தொடர இயலவில்லை. நடுத்தர பேட்ஸ்மேன்கள் இதுவரை சொதப்பி வருகின்றனர். ஹைதராபாத் அணி பேட்டிங் வரிசை துவக்க வீரர்களையே முழுக்க முழுக்க நம்பி இருப்பது மிகவும் மோசமான ஒன்று.
அதனால், ஹைதராபாத் அணிக்கு நிலைத்து ஆட கென் வில்லியம்சன் போன்ற ஒருவர் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலுக்கு கட்டாயம் தேவை. அவர் காயம் குறித்தும், மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்தும் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “டெல்லி அணிக்கு எதிராக ஆடுவதற்கு முன்பாக எங்களுக்கு சில நாட்கள் எங்களை தயார் படுத்திக்கொள்ள ஓய்வு கிடைத்துள்ளது. அடுத்து வரும் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் உடல் தகுதி பெற்று மீண்டும் ஆட இருக்கிறார். அதேபோல, வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹ்மது அணியில் இடம்பெறுவர்” என்று ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.