மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. அதன் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசினார்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மொஹாலி பிந்த்ரா மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடியதால் 6-ஆவது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது.
5 பவுண்டரியுடன் 32 ரன்களை விளாசிய ரோஹித் வில்ஜோயன் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். அவருக்கு பின் ஆட வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. சூர்யகுமார் யாதவ் 11, யுவராஜ் சிங் 18, பொல்லார்ட் 7 என சொற்ப ரன்களில் வெளியேறினர்.
டி காக் 7-ஆவது ஐபிஎல் அரை சதம்: டி காக் 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 60 ரன்களை விளாசிய நிலையில், ஷமி பந்தில் எல்பிடபிள்யு ஆனார். ஹார்திக் பாண்டியா 31, க்ருணால் பாண்டியா 10 ரன்களுடன் அவுட்டாகி திரும்பினர்.
இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 176 ரன்களை எடுத்தது.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
பஞ்சாப் தரப்பில் கேப்டன் ஷமி 2-42, வில்ஜோயன் 2-40, முருகன் அஸ்வின் 2-25 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
177 ரன்கள் வெற்றி இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தரப்பில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஒருமுறையில் கெயில் அதிரடியாக ஆட, மறுமுனையில் ராகுல் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 40 ரன்களை விளாசிய கெயில், க்ருணால் பாண்டியா பந்தில் அவுட்டானார்.
2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 21 பந்துகளில் 43 ரன்களை எடுத்த மயங்க் அகர்வால், க்ருணால் பாண்டியாவிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
லோகேஷ் ராகுல் அபாரம்: பின்னர் ராகுல்-டேவிட் மில்லர் நிதானமாக ஆடி தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 71 ரன்களுடன் ராகுலும், 15 ரன்களுடன் மில்லரும் அவுட்டாகாமல் இருந்தனர். 3-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்களை சேர்த்தனர்.
18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வென்றது பஞ்சாப்.
மும்பை தரப்பில் க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இது பஞ்சாப் அணி பெறும் 2-ஆவது வெற்றியாகும்.
நடுவரின் தவறால் ஓரே ஓவரில் 7 பந்துகளை வீசிய அஸ்வின்: டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். அப்போது மும்பை வீரர்கள் ரோஹித், டி காக் ஆகியோருக்கு மாறி மாறி பந்துவீசிய அஸ்வின் மொத்தம் 7 பந்துகளை வீசினார். டி காக் ஏழாவது பந்தில் பவுண்டரி விளாசினார். அஸ்வின் 7-ஆவது பந்து வீசியதை நடுவர் கவனிக்க மறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே மும்பை-பெங்களூரு ஆட்டத்தில் மலிங்கா நோபாலாக வீசிய பந்தை கவனிக்காமல் நடுவர் ரவி செயல்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.