அல்ஜாரி ஜோசப்பிற்கு பதிலாக மும்பை அணியில் இணையும் ஹெண்ட்ரிக்ஸ்
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகியுள்ள அல்ஜாரி ஜோசப்பிற்கு பதிலாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெண்ட்ரிக்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அறிமுகமான அல்ஜாரி ஜோசப் என்னும் விண்டீஸ் வீரர் தனது அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஒரே போட்டியில் பெற்றார்.
முதல் போட்டியில் ஆறு விக்கெட் வீழ்த்திய அல்ஜாரி ஜோசப் அடுத்தடுத்த போட்டிகளில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை, இது மட்டுமல்லாமல் ஒரு போட்டியின் போது காயமடைந்து ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகினார்.
காயம் காரணமாக அல்ஜாரி ஜோசப் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், அல்ஜாரி ஜோசப்பிற்கு பதிலாக பெய்ரோன் ஹெண்ட்ரிக்ஸ் என்னும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ள எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரரான ஹெண்ட்ரிக்ஸின் எண்ட்ரீ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றன. ப்ளே ஆஃப் சுற்றை கருத்தில் கொண்டே ஹெண்ட்ரிக்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, அதில் 6 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.