ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 23 ரன்களை எடுத்தார். இறுதியில் ஷெரயாஸ் கோபால் 7 பந்துகளில் 19 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தார். சென்னை அணியின் ஜடேஜா, சாஹர், சர்துல் தாக்கூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அதிக ரன்களை எடுக்காமல் தடுத்தனர்.
பின்னர் சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியபோது ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் தோனி மறுமுனையில் அம்பத்தி ராயுடுவுடன் இணைந்து பொறுமையாக விளையாடி ரன்களை எடுத்தார். தோனி 43 பந்துகளில் 58 ரன்களையும், ராயுடு 47 பந்துகளில் 57 ரன்களையும் எடுத்தனர். இருவரும் அவுட்டாகிவிட்ட நிலையில், சென்னை வெற்றி பெற இறுதி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது.
பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்ட நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை வெளியிலிருந்து பார்த்துகொண்டிருந்த தோனி களத்திற்குள் சென்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக தோனிக்கு ஒரு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவிதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
கடைசி பந்தில் வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி சென்னை அணிக்கு சேண்ட்னெர் வெற்றியை தேடித் தந்தார். இந்தத் தொடரில் இதுவரை 6 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 100 ஐபிஎல் போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.