பஞ்சாப் அணியுடன் வான்கடே மைதானத்தில் மோத இருக்கும் மும்பை அணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. பயிற்சியின் போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் உலகக்கோப்பை செல்லும் இந்திய அணிக்கும் பெருத்த அடியை தரும் வண்ணம், ரோஹித் ஷர்மா காயம் அடைந்துள்ளார்.
நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்ட ரோஹித் ஷர்மா, வலைப்பயிற்சியை முடித்து விட்டு, மைதானத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கையில், வலது தொடையில் தசை பிடிப்பு ஏற்பட்டு அங்கேயே விழுந்துள்ளார். பின்னர் அணியின் பிசியோ நிதின் படேல், சிறிது நேரம் அவருக்கு நீவி விட பின் அறைக்கு அழைத்து சென்றனர்.
அதன் பின் சிறிது நேரம் பயிற்சியை நிறுத்தி விட்டு, மின்சாரம் மூலம் ரோஹித் ஷர்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அறைக்கு கூட செல்லாமல், பவுண்டரி அருகேயே அமர்ந்துவிட்டார் ரோஹித் ஷர்மா. வீரராகுலின் பயிற்சியை சிறிது நேரம் கண்டுகளித்த ரோஹித். பின்னர் மெதுமெதுவாக தாங்கி பிடித்தவாறு மைதானத்தில் இருந்து உடைமாற்றும் அறைக்கு சென்று ஓய்வு பெற்றார்.
இப்படி இருக்க, இன்னும் காயம் குறித்து மும்பை அணி நிர்வாகம் பிசிசிஐ க்கு தெரிவிக்கவில்லை. தசை கிழிதல், ரத்தம் கட்டுதல், நரம்பு சார்ந்த பிரச்சினைகள் இருக்குமா எனவும் அறியப்பட்டு வருகிறது. இப்படி இதில் ஏதேனும் ஒன்று இருந்தால், நிச்சயம் குணமாக 6 வாரங்கள் ஆகும். உலககோப்பைக்கும் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ளன. இது இந்திய அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போதும் ரோஹித் ஷர்மாவிற்கு இதே போல காயம் ஏற்பட்டது, ஆனால் சரியான நேரத்தில் குணமடைந்த ரோஹித் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்த உலககோப்பைக்கு சென்று, அரையிறுதி வரை சென்ற இந்திய அணிக்கு சிறப்பாக ஆடினார்.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
அதேபோல இம்முறையும் விரைவில் குணமடைந்து அணிக்கு அபாரமாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 30 துவங்கும் உலகக்கோப்பையில், ஜூன் 5ஆம் தேதி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது இந்தியா.