போனில் வாழ்த்து சொன்ன அஸ்வின்; நெகிழ்ந்து போன வருண் சக்கரவர்த்தி !!

போனில் வாழ்த்து சொன்ன அஸ்வின்; நெகிழ்ந்து போன வருண் சக்கரவர்த்தி

ஐ.பி.எல் ஏலத்தில் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட வருண் சக்கரவர்த்திக்கு, பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் போனில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

27 வயதான வருண் சக்கரவர்த்தி தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். மதுரை பாந்தர்ஸ் அணிக்காக ஆடி, தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் மிரட்டினார். 10 டி20 போட்டிகளில் ஆடி 4.7 எகானமி ரேட்டை வைத்திருந்தார். இவரது ஸ்பின் பவுலிங்கை பார்த்து, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி, இவரை மிகச்சிறந்த திறமைசாலி என வர்ணனையில் பாராட்டியிருந்தார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் அருமையாக வீசியதால் விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி டிராபி ஆகிய தொடர்களில் தமிழ்நாட்டு அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில், இவரது திறமையை கண்ட பஞ்சாப் அணி, ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகளுடன் கடும் போட்டியிட்டு வருண் சக்கரவர்த்தியை எடுத்தது.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 8.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டதற்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வருண் சக்கரவர்த்திக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து சொல்லி வரும் நிலையில், பஞ்சாப் அணியின் கேப்டனான அஸ்வின் ஒருபடி மேலே சென்று வருண் சக்கரவர்த்திக்கு போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ள வருண் சக்கரவர்த்தி, “அஸ்வின் எனக்கு கால் செய்த அந்த நொடி நான் அதிர்ந்தே போய்விட்டேன், அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் எனது தந்தையை கட்டிபிடித்து கொண்டேன். போனில் அழைத்த அஸ்வின் உனது முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் நேரில் சந்திப்போம் என்று தெரிவித்தார்.

அஸ்வின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். தினமும் அவர் பந்துவீசும் முறையை வீடியோவில் பார்த்து கொண்டே இருப்பேன். ஒரே மாநிலத்தில் இருக்கும் நாங்கள் இருவரும் ஒரே அணியில் இடம்பெற்றிருப்பதும், அஸ்வின் கேப்டன்சியில் கீழ் விளையாட உள்ளதும் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான். நிச்சயமாக அஸ்வினிடம் இருந்து நிறைய கற்று கொள்வேன்” என்றார்.

 

Mohamed:

This website uses cookies.