ரிஷப் பன்ட் இந்தியாவின் அடுத்த சொத்து யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.பலம் வாய்ந்த மும்பையை அதன் சொந்த மைதானத்திலேயே 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி அணி.
முதலில் ஆடிய தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 176 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
மும்பை வாங்கடே மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 3-ஆவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள யுவராஜ் சிங் அரைசதம் அடித்த போதிலும் அணியின் வெற்றிக்கு உதவவில்லை. போட்டி முடிந்தபின் யுவராஜ் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரிஷப் பந்திடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் மிகச்சிறந்த வீரராக உருவாகுவார், அதனால் அவரை நாம்(பிசிசிஐ) வளர்க்கும்போது பாதுகாப்பாக அவரை வழிநடத்த வேண்டும். உலகக் கோப்பைப் போட்டியில் ரிஷப் பந்த் இடம் பெறுவாரா என எனக்குத் தெரியாது. ஆனால் இன்றைய ரிஷப் பந்த்தின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது.
கடந்த ஐபிஎல் சீசனிலும் ரிஷப் பந்த் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்திய அணியில் இடம் பெற்று டெஸ்ட் போட்டிகளிலும் நன்றாக பேட் செய்தார். 21 வயதில் இந்திய அணியில் இடம் பெற்று வெளிநாடுகளில் சதம் அடிப்பது என்பது சாதரண செயல் அல்ல. அவருக்கு மிக்சிசிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா விரைவாக ஆட்டமிழந்ததுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனென்றால், மிகப்பெரிய இலக்கை விரட்டும்போது, ரோஹித் அணியில் இருப்பது தார்மீக ஆதரவு தரும். டீகாக், பொலார்ட் ஆகியோர் நன்றாக பேட்செய்தபோதிலும் விரைவாக விக்கெட்டுகளை இழந்துவிட்டார்கள். எனக்கும் சரி, மற்றவீரர்களுக்கும் நீண்டநேரம் நிலைத்து இருக்கும் வகையில் பாட்னர்ஷிப் அமையாதது மிகப்பெரிய குறை. நல்ல பாட்னர்ஷிப் அமைந்திருந்தால், போட்டி மிகவும் நெருக்கடியாகச் சென்றிருக்கும்.
டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கை தேர்வு செய்தது. தில்லி தரப்பில் தொடக்க வரிசையில் களமிறங்கிய பிரித்வி ஷா 7 ரன்களுடனும், கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 16 ரன்களுடனும் மெக்கிளேனகன் பந்தில் அவுட்டானார்கள். பின்னர் ஷிகர் தவன்-காலின் இங்கிராம் இணை ரன்களை சேர்த்தது. 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 47 ரன்களை எடுத்த இங்கிராம், பென் கட்டிங் பந்துவீச்சில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடி வந்த தவன் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 43 ரன்களை சேர்த்திருந்த போது, ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் அவுட்டானார்.
அதன் பின்னர் ரிஷப் பந்த்தைத் தவிர மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை,. கீமோ பால் 3, அக்ஸர் பட்டேல் 4 ரன்களுக்கு வெளியேறினர்.
ரிஷப் பந்த் சிக்ஸர், பவுண்டரி மழை: இளம் வீரர் ரிஷப் பந்த் அபாரமாக ஆடி தலா 7 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 78 ரன்களை குவித்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். ராகுல் தேவ்தியா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்தது தில்லி.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 14, குயின்டன் டி காக் 27, சூர்யகுமார் யாதவ் 2 என சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின்னர் யுவராஜ் சிங்-பொல்லார்ட் இணை சேர்ந்து ரன்களை குவித்தனர். எனினும் பொல்லார்ட் 21 ரன்களுக்கும், ஹார்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர்.
யுவராஜ் சிங் அதிரடி: அவர்களைத் தொடர்ந்து வந்த க்ருணால் பாண்டியா 32, பென் கட்டிங் 3 ரன்களுக்கு வெளியேறினர்.
நிலைத்து ஆடி வந்த யுவராஜ் சிங் 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 53 ரன்களை குவித்து வெளியேறினார். மெக்கிளேனகன் 10 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து மும்பை அணி 176 ரன்களை மட்டுமே எடுத்தது. தில்லி தரப்பில் இஷாந்த் சர்மா 2-34, ரபாடா 2-23, விக்கெட்டுகளை வீழ்த்தினர்.