சென்னை அணிக்கெதிராக ராஜஸ்தான் தோற்காது என நினைக்கிறேன் என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இந்தியாவில் பிரிமியர் தொடரின் 12வது சீசன் தற்போது நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 31ம் தேதி நடக்கும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, ராஜஸ்தானை சந்திக்கிறது.
முதல் இரு போட்டியில் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது சென்னை அணி. அம்பதி ராயுடு பேட்டிங்கில் ஏமாற்றுவதால் இம்முறை முரளி விஜய் வரலாம். வாட்சன், ரெய்னா பெரியளவில் ஸ்கோர் எடுக்க முயற்சித்தால் நல்லது. கேப்டன் தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ என இருப்பது கடைசிநேர ரன்குவிப்புக்கு உதவலாம்.
பவுலிங்கில் சென்னை அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி வருகிறது. இதில் அனுபவ வீரர்கள் ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிராவோ கூட்டணி அணிக்கு பெரிதும் நம்பிக்கை தருகிறது. இதனால் தீபக் சகார், ஷர்துல் தாகூர் நெருக்கடி இல்லாமல் செயல்படுகின்றனர். தவிர மூன்று அன்னிய வீரர்கள் மட்டும் இடம் பெறுவதால் டுபிளசிக்கு இடம் கிடைக்காது.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. கேப்டன் ரகானே, பட்லர் கூட்டணி சிறந்த துவக்கம் தர, ஐதராபாத்துக்கு எதிராக சதம் அடித்த சஞ்சு சாம்சன், ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு கூடுதல் வலு சேர்க்கின்றனர்.
அணியின் பவுலிங் தான் பலவீனமாக உள்ளது. குல்கர்னி, கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர் என பலரும் ரன்களை வாரி வழங்குகின்றனர். ஸ்டோக்ஸ், உனத்கட் இருந்தாலும் பந்துவீச்சு பலன் தரவில்லை. ஸ்ரேயாஷ் கோபால் மட்டும் சற்று ஆறுதல் தருகிறார்.
முதல் போட்டி நடந்த சேப்பாக்கம் ஆடுகளம் மிக மந்தமாக இருக்க பெங்களூரு அணி 70 ரன்னுக்கு சுருண்டது. இதைத் துரத்திய சென்னை 17.4 வது ஓவரில் வெற்றி பெற்றது. இரவில் பனிப்பொழிவு இருந்த போதும் பந்து சுழலுக்கு கைகொடுத்தது. இரு அணி கேப்டன்கள் தோனி, கோஹ்லி இருவரும் ஆடுகளம் சரியில்லை என விமர்சித்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாக ‘டென்ட்’ அமைத்து ஆடுகளத்தை வெயிலில் இருந்து பாதுகாத்து வந்தனர். இது ஆடுகளத்தில் வெடிப்பு ஏற்படுவதை தடுத்து, பேட்டிங்கிற்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
சென்னை அணியின் லுங்கிடி (தெ.ஆப்.,) விலகியதால் ஏற்கனவே வேகப்பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. இவருக்குப் பதில் நியூசிலாந்தின் ஸ்காட் குக்கெலீஜின் 27, சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது மனைவி பிரசவ நேரம் என்பதால் மற்றொரு ‘வேகம்’ டேவிட் வில்லேயும் (இங்கிலாந்து) தொடரில் இருந்து விலகினார். இவருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.
சென்னை, ராஜஸ்தான் அணிகள் 20 போட்டிகளில் மோதின. இதில் சென்னை 12, ராஜஸ்தான் 8ல் வென்றன.
சென்னை அணியின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணி மோதிய 6 போட்டிகளில் 1ல் தான் வென்றது. மற்ற 5 ல் சென்னை வென்றது. கடந்த 2008ல் சென்னை மண்ணில் ராஜஸ்தான் வென்றது. இதன் பின் சென்னை அணியை இங்கு ராஜஸ்தான் வென்றது இல்லை.