20 ஆவது ஓவரில் தோனியை போல அதிரடியாக ஆடக்கூடிய வீரர் எவருமில்லை என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த பிறகு, ரெய்னா மற்றும் டு ப்ளஸிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து நல்ல பார்ட்னெர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். ஆனால், அவர்கள் இறுதிவரை களத்தில் நிலைக்கவில்லை. ரெய்னா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய தோனி, வந்த கணமே பவுண்டரி, சிக்சர்கள் விளாசி அணிக்கு மளமளவென ரன் குவித்தார். குறிப்பாக, 20 ஆவது ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அதில் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என மொத்தம் 21 ரன்கள் அடிக்கப்பட்டது. அதில் தோனி மட்டுமே 19 ரன்களை விளாசினார். இப்போட்டியில் தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார்.
தோனி களத்தில் இருந்தால், 20வது ஓவரில் எப்போதுமே 15 ரன்களுக்கு குறையாமல் அடிப்பது வழக்கம். இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பந்துவீசியது உமேஷ்யாதவ் அல்லது உனட்கட் அல்ல.. உலகின் தலைசிறந்த பவுலர் டிரென்ட் போல்ட். தோனி தான் பெஸ்ட்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதாவது உமேஷ் யாதவ் அல்லது உனட்கட் பந்துவீச்சில் தோனி எளிதில் அடித்து விடுவார். ஆனால், சிறந்த பந்து வீச்சாளர்கள் பந்துவீசினால் தோனி அடிக்க மாட்டார் என பரவலாக பேச்சு அடிபட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இப்படிக் ட்வீட் செய்திருக்கிறார்.
சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் தோனியைத் தவிர வேறு எவரும் எதிர் பார்த்த அளவிற்கு தொடர்ச்சியாக சிறப்பாக ஆடவில்லை. ஒரிரு போட்டிகளில் வாட்சன் மற்றும் ரெய்னா நன்கு ஆடினாலும் மற்ற போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறுகின்றனர். தோனியின் இந்த சிறப்பான நிலை உலகக் கோப்பையிலும் தொடர வேண்டும். அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டார்.