அப்படி எல்லாம் எதுவும் இல்லை; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்
தன்னை நான்காவது வீரராக களமிறக்க வேண்டும் என ஆண்ட்ரியூ ரசல் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிராக 6 ஓவர்களில் 113 ரன்கள் தேவை என்ற நிலையிலும் கூட அயராது வெற்றிக்கு முயன்று 25 பந்துகளில் 60 ரன்களை விளாசினாலும் கடைசியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்தது. உத்தப்பா நேற்று மட்டைப் போடாமல் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தால் கொல்கத்தா பக்கம் வெற்றி ஏற்பட்டிருக்கும்.
இந்நிலையில் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த ரஸல், “214 ரன்களை விரட்டுகிறோம், நான் இறங்கும் போது அணி நல்ல நிலையில் இல்லை. நிதிஷ் ராணா நான் என்ன நினைக்கிறேன் என்று என்னிடம் கேட்ட போது எனக்கு ஒரு வழிதான் தெரியும் அது அடித்து ஆடுவது என்றேன்.
இறங்கும்போதே ஓவருக்கு 14-15 ரன்களை அடித்தால்தான் வெற்றி என்ற நிலையில் ஒரு பேட்ஸ்மென் இறங்குவது நல்ல சூழ்நிலையல்ல. நான் இத்தகைய சூழ்நிலைக்கு பழக்கமானவனே. ஆனால் ஏன் கசப்பும் இனிப்பும் கலந்த அனுபவம் என்று கூறுகிறேன் என்றால் ஒரு அணியாக இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 2 ஷாட்கள் தான் வெற்றிக்குப் பாக்கி ஆனால் முடியவில்லை.
நான் இன்னும் முன்னால் களமிறக்கப்பட வேண்டும் (இதைக்கூறும்போது உதட்டின் மேல் விரலை வைத்து அச்சத்துடன் தயங்கினார்). உள்ளபடியே கூற வேண்டுமெனில் ஒரு அணியாக கொஞ்சம் நெகிழ்வுத்தன்மை தேவை. 4ம் நிலையில் இறங்குவது எனக்கு பிரச்சினையில்லை.
நான் கிரீசில் இருந்தால் விராட் கோலி தன் சிறந்த பவுலர்களைப் பயன்படுத்துவார், இந்த நடைமுறையில் இவர்கள் ஓவர்களையும் முடிக்க வாய்ப்புள்ளது, அப்போது கடைசியில் வெற்றி பெற எளிதாக இருக்கும். ஆகவேதான் நான் முன்னமேயே களமிறங்கினால் எதிரணியினர் தங்கள் சிறந்த பவுலர்களை முடித்து விடும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
ஆண்ட்ரியூ ரசலின் இந்த பேச்சால் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷி மீது கடுமையான விமர்ச்சங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், ஆண்ட்ரியூ ரசல் தன்னிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை, அவரிடம் இருந்து எந்த புகாரும் தனக்கு வரவில்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.