இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் தான் சாம்பியன்; மூன்று காரணங்கள் இதோ
எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்வதற்கு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக உள்ள மூன்று விசயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் செப்டம்பர் 19ம் தேதி துவங்க உள்ளது.
ஒட்டுமொத்த சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக ஐ.பி.எல் தொடர் இருந்து வரும் நிலையில், இந்த தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்தான தனது கருத்தையும், கணிப்பையும் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரிலும் கோப்பையை வெல்ல, அந்த அணிக்கு சாதகமாக உள்ள மூன்று காரணங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1- தரமான இந்திய வீரர்கள்;
இந்திய அணியின் தரமான வீரர்கள் எப்பொழுதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அங்கமாகவே இருந்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில், இந்த வருடமும் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா,சூர்யகுமார் யாதவ் போன்ற சிறந்த இந்திய வீரர்கள் இருக்கின்றனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
2 – குறை சொல்ல முடியாத அணி;
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளதற்கு, அந்த அணி வீரர்களை தேர்வு செய்யும் முறையே முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. உலகின் தலைசிறந்த வீரர்கள் அனைவரும் பொறுக்கி எடுத்து தனது அணியில் எப்படியாவது இணைத்து கொள்ளும் வழக்கம் உடையது மும்பை இந்தியன்ஸ் அணி. கடந்த தொடர்களை போலவே இந்த தொடரிலும் கவுட்டர் நைல், கிரிஸ் லின், டிரண்ட் பவுல்ட் போன்ற கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்கள் பலர் அணியில் இருப்பது மும்பை அணியின் மற்றொரு பலமாக பார்க்கப்படுகிறது.
3 – எத பத்தியும் கவலை கிடையாது;
மும்பை இந்தியன்ஸ் அணி எந்த ஒரு தனி வீரரையும் சார்ந்து இல்லாதது அந்த அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் என யாருக்கு காயம் ஏற்பட்டாலும் அது அணியை பாதிக்காத வகையில் முறையான பேக் அப் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளனர்.
ப்ளேயிங் லெவனில் ஆடும் விக்கெட் கீப்பரை தவிர, சவுரவ் திவாரி மற்றும் ஆதித்யா தாரே என இரண்டு விக்கெட் கீப்பர்களை கூடுதலாக மும்பை இந்தியன்ஸ் அணி வைத்துள்ளது.
அதே போல் ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கும் பேக் வீரர்கள் சரியாக உள்ளதும் மும்பை அணி கோப்பையை மீண்டும் வெல்ல சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.