கடந்த டிசம்பரில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்ட 48 வயது ஸ்பின்னர் பிரவீண் தாம்பே பிசிசிஐ-யினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
2018-ல் இவர் யு.ஏ.இ.யில் நடந்த டி10 லீகில் கலந்து கொண்டு ஆடியதால் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு இவருக்குத் தடை விதித்து, தகுதி நீக்கம் செய்துள்ளது, இதனால் ஐபிஎல் 2020-ல் இவர் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ விதிமுறைகளின் படி வீரர் ஒருவர் ரிட்டையர்ட் ஆன பிறகுதான் அயல்நாட்டு கிரிக்கெட் லீகுகளில் ஆட முடியும், இவர் ரிட்டையர்மெண்ட் அறிவிக்காமலேயே டி10 லீகில் ஆடியது தெரியவர தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டு 2020 ஐபிஎல் ஆடுவதற்கான அருமையான வாய்ப்பை இழந்து பரிதவித்து நிற்கிறார்.
2018 லீகில் ஆடுவதற்காக ரிட்டையர்ட் ஆன தாம்பே பிறகு ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார். அதன் பிறகு மும்பை டி20 லீகில் ஆடி, தன் பெயரை ஐபிஎல் ஏலத்தில் சேர்த்தார். கொல்கத்தா இவரை ஏலம் எடுத்தது, இந்நிலையில் அவர் டி10 லீகில் ஆடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதாவது டி10 லீகில் ஆடுவதற்காக ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டு பிறகு ஓய்வை வாபஸ் பெறுவதாக அறிவித்து ஐபிஎல் ஏலத்துக்குப் பெயரைச் சேர்த்தது விதிமுறைகளைத் துஷ்பிரயோகம் செய்து கண்களில் மண்ணைத் தூவும் வேலையாகும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் விதிமுறைகளை சாமர்த்தியமாக மீறிய இவரை எப்படி ஐபிஎல் வீரர்கள் ஏலப் பட்டியலில் சேர்த்தனர்? என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தாம்பேயை தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் தொடர்பு கொண்ட போது, தனக்கு இது பற்றி இன்னமும் தகவல் வரவில்லை என்றார்.