ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதியில்லை? – பிசிசிஐ திடீர் முடிவிற்கு காரணம் யார்?
வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்கலாம் என பிசிசிஐ சேர்மன் பிரிஜேஷ் படெல் தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் உலகமெங்கிலும் உச்சத்தை அடைந்து தற்போது தனிந்து வரும் நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கோரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மற்ற சில நாடுகளில் வீரர்கள் பயிற்சியைத் தொடங்கிய போதும், இந்தியாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் வீரர்கள் பயிற்சிக்கு திரும்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
மார்ச் மாதத்தில் இருந்து எவ்வித கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடர் நடைபெறாததால் பிசிசிஐ நிர்வாகத்திற்கு சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய ஆகஸ்ட் மாதம் முதல் அக்டொபர் காலத்திற்குள் சர்வதேச தொடர்கள் நடைபெறவில்லை என்றால் ஐபிஎல் தொடரை ரசிகர்கள் இல்லாமல் நடத்த பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஜூன் மாதம் துவங்கவிருந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரும், ஜூலை மாதம் நடைபெறவிருந்த ஜிம்பாப்வே தொடரும் நிறுத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 3000-திற்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த இரு மாதங்களுக்கு இந்தியா எவ்வித தொடர்களிலும் கலத்துக்கொள்ளாது என யூகிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டி நடப்பது குறித்தும், வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது குறித்தும் பிச்சிஐ சேர்மன் பிரிஜேஷ் படேல் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “சர்வதேச தொடர் துவங்க அக்டொபர் மாதத்திற்கும் மேலாக ஆகலாம். ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிடலாம். வெளிநாடு வீரர்களை ஆடவைக்க விருப்பம் இருக்கிறது. ஆனால் சூழல் சாதகமாக இல்லை. ஆதலால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமலும் நடக்கலாம்.” என தெளிவாக பேசியுள்ளார்.