ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு இருக்கும் இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
துவக்க வீரர்கள் ( சாம் கர்ரான், டூபிளசிஸ்)
கடந்த இரண்டு போட்டிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறக்கப்பட்டு வரும் சாம் கர்ரான், இன்றைய போட்டியிலும் துவக்க வீரராகவே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் மற்றொரு துவக்க வீரர் டூபிளசிஸ் களமிறங்குவார், கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய டூபிளசிஸ் இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
மிடில் ஆர்டர் ( சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, தோனி, கேதர் ஜாதவ்)
சாம் கர்ரான் துவக்க வீரராக களமிறங்கினால், கடந்த போட்டியை போல் சேன் வாட்சன் இன்றைய போட்டியிலும் மூன்றாவது விக்கெட்டுக்கே களமிறங்குவார். அம்பத்தி ராயூடு மற்றும் தோனி தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கும் பட்சத்தில் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரும் பலமாக இருக்கும். அதே போல் எவ்வித வேலையும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் கேதர் ஜாதவிற்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
ஆல் ரவுண்டர்கள் (ரவீந்திர ஜடேஜா)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான பிராவோ, டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக அடுத்த ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பிராவோ விளையாடவில்லை. ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மட்டுமே விளையாடுவார்.
பந்துவீச்சாளர்கள் (கர்ன் சர்மா/ பியூஸ் சாவ்லா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், லுங்கி நிகிடி)
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கரண் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பியூஸ் சாவ்லாவிற்கு இன்றைய போட்டியில் இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பிராவோவிற்கு பதிலாக இம்ரான் தாஹிரை களமிறக்கலாம் என ரசிகர்கள் விரும்பினாலும், கடைசி ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு இன்றைய போட்டியில் லுங்கி நிகிடிக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.