வெறும் மூன்று விக்கெட்டுகள் போதும்; அஸ்வினின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் பிராவோ
இந்த வருட ஐ.பி.எல் தொடரின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டூவைன் பிராவோ புதிய சாதனை ஒன்றை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு இதுவரை 12 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடரானது நாளை துவங்க உள்ளது.
நாளை துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐ.பி.எல் தொடரின் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான டூவைன் பிராவோ மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் அஸ்வினின் சாதனை ஒன்றை முறியடிப்பார்.
சென்னை அணிக்காக 120 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், மொத்தம் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் 103 போட்டிகளில் சென்னை அணிக்காக களமிறங்கியுள்ள பிராவோ 118 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இன்னும் மூன்று விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினால் சென்னை அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற அஸ்வினின் சாதனையை முறியடிப்பார். ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 134 போட்டிகளில் விளையாடியிருக்கும் பிராவோ 147 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
2013 மற்றும் 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் விளையாடி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபர் என்பதற்காக நீல நிற தொப்பியை பிராவோ வென்றிருக்கிறார். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 19 போட்டிகளில் பங்கேற்றுள்ள பிராவோ 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனைத்து பவுலர்களையும் விட இவரே மும்பைக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் ஆவார். அண்மையில் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ எட்டியது குறிப்பிடத்தக்கது.