மும்பை இந்தியன்ஸ் வீரரை பெருமிதமாக பேசியுள்ளார் சன் ரைசர்ஸ் ஹைட்ரபாத் அணி பயிற்சியாளர் டாம் மூடி.
ஐபிஎல் 2020 லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுகளும் முடிவடையும் தருவாயை எட்டிவிட்டன. முதல் பிளே ஆப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப்போட்டிக்கு சென்றது. இரண்டாவது பிளே ஆப் மற்றும் எலிமினேட்டர் 1 போட்டியில் ஹைதராபாத் அணி வென்று எலிமினேட்டர் 2 போட்டிக்கு சென்றது.
டெல்லி மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் எலிமினேட்டர் 2 போட்டியில் மோதவிருக்கின்றன. இந்நிலையில் மும்பை அணி குறித்தும் அதில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா குறித்தும் ஹைதராபாத் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “இவரைப் போன்ற பினிஷர்கள் கிடைப்பது மிகவும் அபூர்வம். அவர் அப்படி ஒரு பார்மில் இருக்கிறார். அவரை அனைத்து போட்டிகளிலும் நான் எடுத்துக் கொள்வேன். மும்பை அணியை எத்தனை ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என நாம் நினைக்கிறோமோ? அதற்கும் ஒரு படி மேலே சென்று 170 முதல் 175 ரன்களுக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடியவர்.
அந்த அளவிற்கு அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களுள் ஹர்திக் பாண்டியா முதன்மையானவர். அவர் குறைந்தபட்சம் 14 அல்லது 15 பந்துகள் மட்டுமே வழக்கமாக பிடித்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார். அப்படி ஒருவரை ஒவ்வொரு அணியும் தேடிக்கொண்டிருக்கிறது என புகழ்ந்து தள்ளினார்.
இவருக்கு அடுத்ததாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் ஹர்திக் பாண்டியா குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறுகையில், “இது நம்ப முடியாத ஒன்று. ஒரு கட்டத்தில் மும்பை அணி 170 ரன்களுக்கு சுருண்டு விடும் என நான் நினைத்தேன். ஆனால் 200 ரன்கள் அடித்திருப்பது நிச்சயம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ஹர்திக் பாண்டியா 14, 15 பந்துகளை மட்டுமே பிடித்து 38 ரன்கள் அடித்து இருக்கிறார். இது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ரபாடா மற்றும் நார்க்யே ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கும் நிலையில் இவர் இப்படி ரன்கள் அடித்தது நிச்சயம் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது.” என்றார்.