டெல்லி அணியை மிரளவிட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர்; ராஜஸ்தான் அணிக்கு சவாலான இலக்கு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக அந்த அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இதன்பின் வந்த ரஹானேவும் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினார். இதனால் 10 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.
இதன் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் – ஷிகர் தவான் கூட்டணி நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி மளமளவென ரன் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 33 பந்துகளில் 57 ரன்களும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 43 பந்துகளில் 53 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் பின்வரிசையில் வந்த வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி 161 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதே போல் உனாட்கட் 2 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி மற்றும் ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.