ஐபிஎல் டி.20 தொடரில் இன்று மதியம் நடைபெற உள்ள போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.
இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அடைந்த படுதோல்வியில் இருந்து மீள்வதற்காக இன்றைய போட்டியில் கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஜோஸ் பிலிபிஸுக்கு வாய்ப்பு கொடுக்க பெங்களூர் அணி நினைக்கும் பட்சத்தில் ஆரோன் பின்ச் இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.
துவக்க வீரர்கள் (ஆரோன் பின்ச், படிக்கல்)
பெங்களூர் அணியின் துவக்க வீரர்களான ஆரோன் பின்ச்சும், தேவ்தட் படிக்கலும் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வருகின்றனர், இருந்த போதிலும் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன ஆரோன் பின்ச் இனியாவது அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
மிடில் ஆர்டர் (விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், சிவம் துபே)
துவக்க வீரர்களை போன்று பெங்களூர் அணியின் மிடில் ஆர்டரும் பலமாகவே உள்ளது. விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ் மற்றும் சிவம் துபே என மூவருமே குறை சொல்ல முடியாத அளவிற்கே ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வருகின்றனர்.
ஆல் ரவுண்டர்கள் (கிரிஸ் மோரிஸ், வாசிங்டன் சுந்தர்)
பெங்களூர் அணியின் மிக முக்கிய வீரராக கிரிஸ் மோரிஸும், வாசிங்டன் சுந்தருமே திகழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் பெங்களூர் அணிக்கு மிகப்பெரும் பலமாக இருந்து வரும் சுந்தர், கிரிஸ் மோரிஸ் இன்றைய போட்டியிலும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கும் பட்சத்தில் அது ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் நெருக்கடியை கொடுக்கும்.
பந்துவீச்சாளர்கள் ( உடானா, நவ்தீப் சைனி, சாஹல், முகமது சிராஜ்)
பந்துவீச்சாளர்கள் வரிசையில் வழக்கம் போல் இன்றைய போட்டியில் இசுரு உடானா, நவ்தீப் சைனி, சாஹல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரே இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியை போன்று அல்லாமல் இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் அது பெங்களூர் அணிக்கு கூடுதல் பலமே.