ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் டி.20 தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியான இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு, வழக்கத்திற்கு மாறாக ஸ்டோய்னிஸ் துவக்க வீரராக களமிறங்கினார். இடம் மாறி களமிறங்கி இருந்தாலும் தனது அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் முதல் ஓவரில் இருந்தே அடித்து விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ஷிகர் தவான் கொடுத்த கேட்சை எல்லாம் ஹைதராபாத் வீரர்கள் கோட்டைவிட்டதால் 19வது ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடிய ஷிகர் தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்து மாஸ் காட்டினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் (21) மற்றும் சிம்ரன் ஹெய்ட்மர் (42*) ஆகியோரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 189 ரன்கள் குவித்துள்ளது.
ஹைதராபாத் அணி சார்பில் ரசீத் கான், ஜேசன் ஹோல்டர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.