போட்டி நடத்துவதற்கான கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டிக்கான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் பாதியாக குறைத்தது.
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 20 கோடி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பரிசுத்தொகை ரூ.10 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை ரூ.12½ கோடியில் இருந்து ரூ.6¼ கோடியாக குறைத்துள்ளது.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
இதேபோல் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகளுக்கு கடந்த ஆண்டு தலா 8 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது இந்த தொகையை இந்த ஆண்டு தலா ரூ.4 கோடியே 37 லட்சமாக குறைத்து இருக்கிறது.
மேலும் ஐ.பி.எல். ஆட்டத்தை நடத்துவதற்கு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அணியின் உரிமையாளர்கள் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என்ற தொகையை ரூ.50 லட்சமாக கிரிக்கெட் வாரியம் உயர்த்தி இருக்கிறது.
பரிசுத்தொகை குறைப்பு, போட்டி நடத்துவதற்கான கட்டண உயர்வு ஆகியவற்றால் ஐ.பி.எல்.அணி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாக அணி உரிமையாளர்களில் ஒருவர் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்கள். அதில் பிளே ஆப் சுற்றுக்கான பரிசுத்தொகை குறைப்பு போட்டி நடத்துவதற்கு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை உயர்வு உள்ளிட்ட மாற்றங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.