ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனான தோனியின் விக்கெட்டை வீழ்த்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கொடுத்த ஆலோசனைகளை, அந்த அணியின் பந்துவீச்சாளர் ஆவேஸ் கான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது.
மொத்தம் 60 போட்டிகள் இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர்கள் சிலர் இந்த தொடர் குறித்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்த தொடரின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்த டெல்லி அணியின் இளம் பந்துவீச்சாளர் ஆவேஸ் கான், சென்னை அணியுடனான போட்டியின் போது தோனியின் விக்கெட்டை வீழ்த்த ரிஷப் பண்ட் அமைத்து கொடுத்த வியூகம் என்ன என்பதை தற்போது ஓபனாக பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ஆவேஸ் கான் பேசுகையில், “சில ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தன. தோனி அடித்து ஆடுவார் என்று ரிஷப் பண்ட்டுக்கு தெரியும். ஆனால் தோனி களத்தில் இறங்கி பேட்டிங் ஆடி 4 மாதங்கள் ஆகியிருந்ததால், அவருக்கு பேட்டிங் எளிதாக இருக்காது என்பதும் தெரியும். அதனால், தோனிக்கு தைரியமாக ஷார்ட் பிட்ச் பந்து வீசுமாறு ரிஷப் கூறினார். நானும் அதேமாதிரி வீசினேன். இன்சைட் எட்ஜ் பட்டு தோனி போல்டானார் என்று ஆவேஷ் கான் தெரிவித்தார்.
ஒரு விக்கெட் கீப்பராக, பவுலர்களுக்கு ஆகச்சிறந்த அறிவுரைகளை வழங்கி பல ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுக்கு காரணமாக இருந்த தோனியையே அவுட்டாக்க ஐடியா கொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் ரிஷப் பண்ட்.