உங்களுக்கு நீங்களே ஆப்பு வச்சிக்கிட்டீங்களே; பெங்களூர் அணியை பார்த்து பரிதாபப்படும் முன்னாள் வீரர் !!

தொடர்ந்து சொதப்பி வரும் கிளன் மேக்ஸ்வெல்லை அதிக விலைக்கு எடுத்து பெங்களூர் அணி பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் கைவசம் இருக்கும் தொகையை வைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.

இந்த தொடரில் கெய்ல் ஜேமின்சன், ஷாருக் கான் போன்ற இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு ஏலம் போனது பலருக்கும் ஆச்சரியப்படுத்தியது. ஆதே போல் மறுபுறம் கிரிஸ் மோரிஸ், கிருஷ்ணப்பா கவுதம், கிளன் மேக்ஸ்வெல் போன்ற வீரர்களுக்காக அனைத்து அணிகளும் போட்டி போட்டு அவர்களுக்காக கோடி கோடியாய் கொட்டியதும் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக கடந்த தொடர்களில் மிக மோசமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே உண்டாக்கியுள்ளது. சென்னை அணியுடனான கடுமையாக மல்லுக்கட்டி பெங்களூர் அணி கிளன் மேக்ஸ்வெல்லை 14.25 கோடி ரூபாய் கொடுத்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக், பெங்களூர் அணி பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிராட் ஹாக் பேசுகையில், “மேக்ஸ்வெல் ஆடிய 9 ஐபிஎல் சீசன்களில் 2 சீசனை தவிர வேறு எதிலுமே சரியாக ஆடியதில்லை. ஆனாலும் அவரை ஏன் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஆர்சிபி எடுத்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதன்மூலம் ஆர்சிபி பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் நன்றாக ஆட வேண்டும் என்று ஆர்சிபி பிரார்த்தனை தான் செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய பிராட் ஹாக், “இது மேக்ஸ்வெல்லின் தவறல்ல. அவர் ஒவ்வொரு ஏலத்திலும் அவரது பெயரை சேர்க்கிறார்; அவ்வளவுதான். அவர் சரியாக ஆடவில்லை என்றாலும், அணிகள் அவரை போட்டி போட்டுக்கொண்டு அதிக தொகைக்கு ஏலமெடுக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய தொகையெல்லாம் மேக்ஸ்வெல்லுக்கு கொஞ்சம் ஓவர்தான்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.